Wednesday 28 December 2011

இனிதாய் பூத்ததே!

மாலை மயங்கி வந்தது இரவு

மங்கிய இருளில் மருண்டது அல்லி

கடிதாய் வீசிக் காற்றும் வந்தது

கவலைகளை காற்றிடம் கழறியது அல்லி

சந்தமிகு சந்திரனைக் காணவில்லை-மின்னும்

சந்தன நிறத்தான் உதிக்கவில்லை இன்னும்

என்ன பாவம் செய்தேன் இவனை நான் மணக்க

எழுகிறான் தினமும் தாமதமாக

தேய்ந்தே வளருகின்றான் மாதம் ஒவ்வொன்றும்

தேடினாலும் வருவதில்லை அமாவசை அன்று

கமல மலராள் கொடுத்து வைத்தவள்

கதிரவனைப் பிரியாமல் கழிக்கிறாள் பகலை

வீசுகின்ற தென்றலே வேதனை தினமும்

விவாகரத்து பெற்றுத்தா வேண்டாம் இவ்வாழ்க்கை

வெறுத்த கூறிய இவ்வார்த்தைக் கேட்டு

மறுத்துக் கூறியது தென்றல் காற்று

குமுதமே நீதான் கொடுத்துவைத்தவள்

கமலத்தை கருதி கலங்க வேண்டாம் நீ

கதிரவனைப் பற்றி அறியாயா நீ

பகலில் மலரும் அத்தனை மலர்களும்

பரிதிக்குச் சொந்தம் ஆனால்

அம்புலிக்கோ அல்லி நீ மட்டும்தான் சொந்தம்

அதனால் தான் குமுதமே நீ கொடுத்துவைத்தவள்

கவலை நீங்கிடு களிப்புடன் வாழ்ந்திடு

கண்ணியமிகுந்த இவ்வார்த்தைகள் கூறி

காற்றும் விலகித் தன்வழிச் சென்றது.

இரவின் இறுதியில் சந்திரன் வருகையில்

இனிதாய் மலர்ந்தது அல்லியின் வதனம்

No comments:

Post a Comment