Wednesday 28 December 2011

என்றென்றும் உன் மடியில்

மார்கழிப் பனியின் இரவில்
மங்கிய ஒளியின் நிலவில்

மயக்கும் மலர் வாசத்தில்
மனச்சோர்வு மிகப்பெற்று

தெருவோர விளக்கொளியில்
வருகிறாயா நீ என்று

பார்த்தவிழி பார்த்தபடி
பாவை நான் காத்திருக்க

நாழிகையும் கடந்து நடுநிசியானது
நான் தேடும் நீயோ வரவேயில்லை.

காலையில் நடந்த கருத்து வேறுபாடு
கவனத்தில் வந்து கண்ணீர் பெருக

தவறு மட்டும் என் மேல்தான்
தனிப்பெரும் தலைவனே

விரைவினில் வந்துவிடு
விழிநீர் துடைத்துவிடு

உன்னைக் காணாமல் உருகிக் கரையும்
என்னிதையம் உடைந்து துகள்களானது

எண்ணியபடி ஏறிட்டேன் தெருவை
ஏறுபோல் நடந்து எதிரில் நீ வர

புள்ளியாய் தொலைவில் தெரியும் உன்னை
புன்னகையோடு மகிழ்ந்து நோக்கினேன் நானும்

ஆயிரம் கோடி ஆடவர் நடுவிலும்
அறிந்திட முடியும் உன்னை என்னால்

வீட்டில் நீ நுழைய விம்மும் மனதுடன்
வாட்டிய கவலையின் வருத்தம் தீர

மனம் உருகி நின்று மன்றாடினேன் நான்
மறுமொழி சொல்லாமல் கடந்து சென்றாய் நீ

உணவும் உறக்கமும் வேண்டாம் எனக்கு
உட்கார்ந்தேன் ஒரு ஓரமாக

உள்ளே சென்ற நீ உடனே வந்து
கள்ளமில்லாமல் கண்ணீர் துடைத்து

உண்ணும் உணவை கிண்ணத்திலிட்டு
உளம் சோர்ந்த எனக்கு ஊட்டியும் விட்டாய்

இது போதும் இனியவனே
இந்த அன்பு ஒன்றுதான்

எனைக் கட்டிப் போட்டது
என்றும் உன் மடியில்

No comments:

Post a Comment