Wednesday 28 December 2011

என் ஆதவனே

என் ஆதவனே உன் அழகு முகம் கண்டு மலரும் தாமரை நான்

நீ செல்லுமிடமெல்லாம் தலை திருப்பும் சூர்யகாந்தி நான்

என் சந்திரனே உன்னைப் பிரியாதிருக்கும் நீல வானம் நான்

உன் வரவு கண்டு மலரும் அல்லி மலர் நான்

நீ கடலானால் அலையாக நான்

கண்ணானால் இமையாக நான்

சுவாசிக்க மறந்தாலும் உன்னை நேசிக்க மறக்கவில்லை நான்

உன்னிடம் யாசிக்கிறேன் பிரியாத வரம் தருவாயா

தந்தைக்கு

பெண்ணாய் நானும் பிறந்ததை அறிந்து

பெருமை மிகவும் கொண்டு

மண்ணில் தவழ்ந்து வரும்போது

மடியில் வைத்து மகிழ்ந்து

துள்ளித் திரிந்த காலத்தில்

பள்ளிக்கூடம் சேர்த்து

கல்லூரியில் நான் கால் வைக்க

கண்ணும் கருத்துமாய் கவனித்து

ஒவ்வொரு படியாய் முன்னேற

ஒத்துழைப்பு மிக நல்கி

நல்ல வேலை கிடைத்தவுடன்

நாளும்பொழுதும் எதிர்நோக்கி

கண்ணுக்கினிய கணவனையும்

கடமை மாறாமல் தேர்ந்து கொடுத்து

முதிர்ந்த இந்த வயதினிலும்

மூப்படையா இளமையுடன்

என் நலமே தினமும் நினைத்து

தன்னலம் துறந்த தந்தைக்கு

கைம்மாறு செய்து கடனைத் தீர்க்க

கடவுளிடம் நான் வரம் கேட்பேன்

அடுத்து வரும் பிறவிகளிலும்

அவருக்கே நான் மகளாக.

(பெண் குழந்தைகளைக் கண்ணெனப் போற்றும் தந்தைகளுக்கு சமர்ப்பணம்)

என்னவனே

வான்மதியை வடித்து செய்த வட்ட வதனமும்

வதனத்தில் நிறைந்திருக்கும் வசீகரமும்

கயல்மீன்கள் நாணும் கருவண்டுக் கண்களும்

கண்களில் குடியிருக்கும் கனிவுப் பார்வையும்

முல்லைநிகர் பற்களில் முறுவலின் ஆட்சியையும்

முறுவலில் முகிழ்ந்திருக்கும் அன்பின் மாட்சியும்

தாய்போல் அரவணைத்துத் தாலாட்டும் கைகளும்

தந்தைபோல் வழிநடத்தும் தங்கநிறப் பாதமுமாய்

கண்ணுக்குள் ஒளியாகக் கலந்துவிட்ட உன் உருவம்-நான்

மண்ணுக்குள் மறைந்தாலும் மறவாது மன்னவனே.

என்றென்றும் உன் மடியில்

மார்கழிப் பனியின் இரவில்
மங்கிய ஒளியின் நிலவில்

மயக்கும் மலர் வாசத்தில்
மனச்சோர்வு மிகப்பெற்று

தெருவோர விளக்கொளியில்
வருகிறாயா நீ என்று

பார்த்தவிழி பார்த்தபடி
பாவை நான் காத்திருக்க

நாழிகையும் கடந்து நடுநிசியானது
நான் தேடும் நீயோ வரவேயில்லை.

காலையில் நடந்த கருத்து வேறுபாடு
கவனத்தில் வந்து கண்ணீர் பெருக

தவறு மட்டும் என் மேல்தான்
தனிப்பெரும் தலைவனே

விரைவினில் வந்துவிடு
விழிநீர் துடைத்துவிடு

உன்னைக் காணாமல் உருகிக் கரையும்
என்னிதையம் உடைந்து துகள்களானது

எண்ணியபடி ஏறிட்டேன் தெருவை
ஏறுபோல் நடந்து எதிரில் நீ வர

புள்ளியாய் தொலைவில் தெரியும் உன்னை
புன்னகையோடு மகிழ்ந்து நோக்கினேன் நானும்

ஆயிரம் கோடி ஆடவர் நடுவிலும்
அறிந்திட முடியும் உன்னை என்னால்

வீட்டில் நீ நுழைய விம்மும் மனதுடன்
வாட்டிய கவலையின் வருத்தம் தீர

மனம் உருகி நின்று மன்றாடினேன் நான்
மறுமொழி சொல்லாமல் கடந்து சென்றாய் நீ

உணவும் உறக்கமும் வேண்டாம் எனக்கு
உட்கார்ந்தேன் ஒரு ஓரமாக

உள்ளே சென்ற நீ உடனே வந்து
கள்ளமில்லாமல் கண்ணீர் துடைத்து

உண்ணும் உணவை கிண்ணத்திலிட்டு
உளம் சோர்ந்த எனக்கு ஊட்டியும் விட்டாய்

இது போதும் இனியவனே
இந்த அன்பு ஒன்றுதான்

எனைக் கட்டிப் போட்டது
என்றும் உன் மடியில்

அழகு

கவிதைபாடும் கருங்குயில் குரலில்

கானகத்தில் வீழும் காட்டருவியின் ஒலியில்

கலகலத்துச் சிரிக்கும் மழலையில் சிரிப்பில்

காற்றில் மிதந்து வரும் வேய்குழல் இசையில்

கட்டவிழ்ந்து ஓடும் கன்றின் துள்ளலில்

காவிரியாற்றின் கரையோர மணலில்

கருவண்டாடும் கனகமலர்ச் சோலையில்-நான்

காண்பது எல்லாம் கவின்மிகு அழகு-ஆனால் என்

கன்னித் தமிழ்மொழியில் உள்ளதோ கடவுளின் பேரழகு.

தை மகள்

கதிரவன் கரங்கள் நீட்டிக்

கமலம் தன் இதழ் விரிக்க

காலையின் பனிப்போர்வையில்

கன்னியர் பொங்கல் வைக்க

கரும்பின் நல் சுவையினாலே

கன்று தாய்ப் பால் மறக்க

உழவர் ஏர் பூட்டிச் சென்று

உவப்புடன் கழனி சேர

நல்லவை நடக்குமென்ற

நாயகன் அருளினாலே

தை மகள் தேரில் ஏறி

தமிழகம் பவனி வந்தாள்

கவசம்

பனி ரோஜா மொட்டொன்று

பவள இதழ் விரித்தின்று

கடிதாக மலர்ந்தது

காற்றினிலே அசைந்தது.

அடுத்த வீட்டுத் தோட்டத்தில்

அலர்ந்திருந்த மல்லிக்கு

அதன் அழகில் அசூயை

அதனால் கூறும் அறிவுரை

பேரழகுத் தங்கையே

பிரமித்தேன் உன் அழகில் ஆனால்

இந்தக் கூர் முட்கள்

வந்து குறைத்தன உன்னழகை

என்று கூறியது

ஏளனமாய் நகைத்தது

மல்லியின் பேச்சை நம்பி

முட்களைக் கடிந்தது ரோஜா

கொல்லவே வந்தீர் நீங்கள்

கொடும் கூர் முட்களே

உம்மால் எனக்குச் சிறுமை

ஒழிந்துபோம் என்னை விட்டு

பழியான இந்த வார்த்தைக்கேட்டு

பதைபதைத்து அதனால்

மனமுடைந்த முட்கள்

மண்ணில் உதிர்ந்தன

அடுத்த நிமிடம் ரோஜாவை

ஆடு மேய்ந்து சென்றது

கவசமாக முட்களைக்

கருதாமல் இழந்த ரோஜா

கதறி இனி என்ன பலன்

அதிகாலை நிலவு

அதிகாலை நிலவே! அழகான நிலவே!

ஆலமரத்தின் இலைகளின் நடுவே

அமுதைப்பொழியும் நிலவே!

ஆகாயவெளியில் அரசிபோல

ஆட்சி செலுத்திய நிலவே!

அன்பனைக் கண்டவுடன் நாணி

அகத்துள் மறையும் ஆரணங்கு போல்

ஆதவனைக் கண்டதும் உடனே

அஸ்தமித்திடும் நிலவே!

நேசம் மறப்பதில்லை!

கண்ணின் மணி என்றவனே

கண்ணில் நீரை வரவைத்தது ஏனோ!

வெண்ணிலா வதனமென்றவனே

வேதனையைத் தந்துவிட்டது ஏனோ!

மாதுளம்பூ இதழ்கள் என்றவனே

மாது எனைத் தவிக்கவிட்டது ஏனோ!

பளிங்கு நிகர் இதயம் என்றவனே!

பட்டெனப் போட்டுடைத்தது ஏனோ!

பொன்னிகர் மேனி என்றவனே!

பொன்னுக்காக பெண் தேடியது ஏனோ!

பாசத்தை மறந்து நீ பணத்தைத் தேடினாலும்

நேசம் மறக்கவில்லை என் நெஞ்சம்

மறந்துவிடு என்றவனே மாட்டேன் இப்பிறவியில்

இறந்துவிடு என்று சொல் இப்போதே ஏற்கிறேன்.

இனிதாய் பூத்ததே!

மாலை மயங்கி வந்தது இரவு

மங்கிய இருளில் மருண்டது அல்லி

கடிதாய் வீசிக் காற்றும் வந்தது

கவலைகளை காற்றிடம் கழறியது அல்லி

சந்தமிகு சந்திரனைக் காணவில்லை-மின்னும்

சந்தன நிறத்தான் உதிக்கவில்லை இன்னும்

என்ன பாவம் செய்தேன் இவனை நான் மணக்க

எழுகிறான் தினமும் தாமதமாக

தேய்ந்தே வளருகின்றான் மாதம் ஒவ்வொன்றும்

தேடினாலும் வருவதில்லை அமாவசை அன்று

கமல மலராள் கொடுத்து வைத்தவள்

கதிரவனைப் பிரியாமல் கழிக்கிறாள் பகலை

வீசுகின்ற தென்றலே வேதனை தினமும்

விவாகரத்து பெற்றுத்தா வேண்டாம் இவ்வாழ்க்கை

வெறுத்த கூறிய இவ்வார்த்தைக் கேட்டு

மறுத்துக் கூறியது தென்றல் காற்று

குமுதமே நீதான் கொடுத்துவைத்தவள்

கமலத்தை கருதி கலங்க வேண்டாம் நீ

கதிரவனைப் பற்றி அறியாயா நீ

பகலில் மலரும் அத்தனை மலர்களும்

பரிதிக்குச் சொந்தம் ஆனால்

அம்புலிக்கோ அல்லி நீ மட்டும்தான் சொந்தம்

அதனால் தான் குமுதமே நீ கொடுத்துவைத்தவள்

கவலை நீங்கிடு களிப்புடன் வாழ்ந்திடு

கண்ணியமிகுந்த இவ்வார்த்தைகள் கூறி

காற்றும் விலகித் தன்வழிச் சென்றது.

இரவின் இறுதியில் சந்திரன் வருகையில்

இனிதாய் மலர்ந்தது அல்லியின் வதனம்

மாற்றம்

ஒரு நிமிடம் உன்னைப் பிரிந்து இருக்க

ஒருபோதும் முடியாது என்றாய் நீ அன்று

ஒரு பத்து நாளாவது என்னை

ஒண்டியாய் இருக்கவிடு என்கிறாய் நீ இன்று

மெலிதாய் தலைவலி என்றாலும்

மனமுடைந்து போகும் என்றாய் நீ அன்று

மண்டையே பிளக்குது என்றாலும்

வேற வேலையில்லை என்கிறாய் நீ இன்று

பேசுவதை நிறுத்தாதே கண்ணே

பேதலித்திடும் என் மனது என்றாய் நீ அன்று

பேச ஆரம்பித்தால் நிறுத்தவே தெரியாதா

பெண்ணே உனக்கு என்கிறாய் நீ இன்று

என்னடா கண்ணே என்றாய் நீ அன்று

என்னடி பெண்ணே என்கிறாய் நீ இன்று

அன்று நீ காதலன் இன்றோ நீ கணவன்

காதலனாய் இருந்தவரை இனிமையாய் நீ இப்படி

கணவனானதும் இந்த மாற்றம் எப்படி?

விந்தை மனது

வாசலில் கோலம் வரைகின்ற போது

வந்து கடக்கும் அந்த ஒரு நொடியில்

பார்வையாலே பாராட்டுக் கூறி பிறர்

பார்க்கும் முன்பே மறையும் உன்னை

பார்த்துக் கொண்டே இருந்துவிடத் துடிக்கும்


வீதிதனில் திரும்புகையில் என்

வீடுதனைக் கடக்கும்போது ஜன்னலில்

மறைந்து நிற்கும் என்னை நோக்கி

விரைந்து செய்யும் ஒரு புன்னகையில் உன்

விரல் பிடித்து கூடவே வந்துவிடத் துடிக்கும்


மொட்டை மாடியில் நின்று வட்டநிலவை நீ ரசித்தாலும்

எட்டிப் பிடித்து நிலவிடம் என்னவனைப் பார்க்காதே

எனக்கு போட்டியாய் வந்தவளே போய்விடு மேகத்தினுள்

என் மனவானின் சந்திரனை நீ மயக்காதே

என்று திட்டித் தீர்த்துவிடத் துடிக்கும்


வசதியான பையனென்று வளைத்தாயோ என்று உனக்கு

வாய்த்த அன்னை வலிந்து கேட்ட போது அவர்கள்

வாயடக்கி விரைவில் விவாகத்துக்கு வித்திட வைத்த நீ

பாலையில் நடந்தாலும் கூடவே தொடரும் பாதையில்

பதிந்த அடிகளாய் உன்னுடனேயே சென்றவிட துடிக்குமென் விந்தைமனது

மழலைக்காலம்

புலரும் காலை பொழுதினிலே

புல்லின் மீது துயில் கொள்ளும்

பனித்துளியை ஸ்பரிசித்து சிலிர்த்த காலம்


பகலவன் தகிக்கத் தொடங்கும் நேரம்

பலவிதமான தோழிகளுடன்

பள்ளி நோக்கி நடந்து பாடம் பயின்ற காலம்


வீடு திரும்பும் வேளையிலே

வெண்ணிற ஆற்றின் மணல் பரப்பில்

வீடு கட்டி விளையாடி மகிழ்ந்த காலம்


சாரல் மழையில் மணல் வீடு

சரிந்திடாமல் குடை மறைத்து - நான்

சொட்ட நனைந்து வீட்டில் திட்டு வாங்கிய காலம்


மஞ்சள் மாலை வெயிலில் கிளிகளின்

கொஞ்சு மழலை ரசித்தபடி நிழல் பரப்பிய

மாமரக் கிளையில் ஊஞ்சல் ஆடிய காலம்


மயக்கும் நிலவின் இரவுகளில் பாட்டியின்

மடியினில் அமர்ந்து பலவிதமாய்

மாயக்கதைகளைக் கேட்டபடி துயின்றகாலம்- இன்னும்


தடைகளின்றி பறவையென பறந்து திரிந்த பொற்காலம்

தவமிருந்தாலும் இனி வருமோ அந்த

தொலைந்து போய்விட்ட மழலைக்காலம்

ஆச்சர்யம்

பார்த்த நாள் முதலாய் என்

பழக்க வழக்கங்கள் அறிவாய்

வாய் வார்த்தை இல்லாமலேயே என்

விருப்பு வெறுப்புக்கள் அறிவாய்

என் சிந்தனையின் ஓட்டம் நான்

செப்பாமலேயே அறிவாய்-என்

அன்னை தந்தை சுற்றம் நான்

அறிவிக்காமலேயே அறிவாய்

அத்தனை அறிந்தும் பார்த்தவுடன் எனை

அறியாதது போல் முகபாவம் கொள்வாய்

ஆச்சர்யம் அடைகிறேன் நான்

அது எப்படி உன்னால் முடிகிறது?

கண்மணியே!

என் வீட்டுத் தாழ்வறை

வெறிச்சோடிக் கிடக்கிறது

நீ தவழாததால்


என் தோட்டத்து ரோஜாக்கள்

துவண்டு கிடக்கின்றன

நீ சூடாததால்


என் மனதின் கதவு

மூடியே கிடக்கிறது மென்விரலால்

நீ தட்டாததால்


என் பெருமை மிகு பெண்மனம்

வறுமை மிகக் கொண்டது

வளர்பிறையே நீ என் வயிற்றில் வராததால்


என் கனவுகள் வறண்டு

கானல் நீரானது கண்மணியே

கைகளில் நீ இல்லாததால்


மற்றோர் பழிச் சொல்தீர உன்

மழலைச் சொல் கேட்பது எப்போது

மனதில் வந்த நீ மடியில் வாராயோ!

அன்னைக்கு

காலையில் கண்விழித்துப் பார்க்கும் பொழுது-உன்

கமல முகம் கண்டு களித்திடும் மனது

தெய்வத்தை நான் தொழத் தேவையில்லை

தாயே நின் தாளைத் தினமும் தொழுவதால்

அலுவலகம் செல்லும் வேளையில்

அன்னையே நின் அன்பு முத்தம் போதும்

வேலைப்பளு என்னை வாட்டியதில்லை

வாசலில் நீ நின்று வரவேற்பதால்

தங்கம் வைரம் நான் வேண்டுவதில்லை

தாயே நின் பொன்முகத்தின் புன்னகையால்

எந்தத் துயரும் என்னை எதுவும் செய்யாது

எனைத் தாங்கிக்கொள்ள உன் கரம் இருப்பதால்

சோகங்கள் என்னை சாய்த்துவிடாது

சுமைதாங்கியாய் நீ இருப்பதால்

சொர்க்கமும் எனக்குத் தேவையில்லை

சாய்ந்துகொள்ள உன் மடி இருப்பதால்

அழகின் முகவரி

மெலிதாய் மழைத் தூறும் மாலையில்

மண்வாசனையை நுகர்ந்தபடி


விரல் பிடித்து நடக்கையில் நீ

வேண்டுமென்றே கேட்கின்றாய்


நான் ஒன்றும் அழகில்லை தானே

நீ ஏன் என்னை விரும்புகிறாய் என்று


ஆம் நீ அத்தனை அழகில்லை என்று தான்

அனைவரும் கூறுகின்றனர் ஆனால்


அக்கறை கொண்ட உன் பார்வை அழகு

அன்பை பொழியும் உன் இதயம் அழகு


இனிய சொற்களே பேசும் உன்

இதழ்கள் அழகு


நெரிசலில் நான் இடிபடாமல்

கவசமாய் காக்கும் கரங்கள் அழகு


நான் எங்கிருந்தாலும் எனைக்காண

நாடிவரும் கால்கள் அழகு


உயிரில் கலந்த உன் நேசம் அழகு

உன்னால் இந்த உலகமே அழகு


நீ அழகா இல்லையா என்று

நிச்சயமாய் தெரியாது ஆனால்


அழகு என்ற வார்த்தையைக் கேட்டால்

அடுத்து என் நினைவுக்கு வருவது நீதான்

உவமை

அன்பே உனக்கு உவமை
ஆதவன் என நினைத்திருந்தேன் ஆனால்
அவனைவிடவும் ஒளி மிகுந்ததல்லவா உன் வதனம்

அன்பே உனக்கு உவமை
வானம் என நினைத்திருந்தேன் ஆனால்
வானத்தைவிடவும் பரந்ததன்றோ உன் இதயம்

அன்பே உனக்கு உவமை
கடல் என நினைத்திருந்தேன் ஆனால்
கடலைவிடவும் ஆழமானதன்றோ உன் காதல்

அன்பே உனக்கு உவமை
மலை என நினைத்திருந்தேன் ஆனால்
மலையைவிடவும் உயர்ந்ததன்றோ உன் பெருமை

அன்பே உனக்கு உவமை
தங்கம் என நினைத்திருந்தேன் ஆனால்
தங்கத்தைவிடவும் சிறந்ததன்றோ உன் தரம்

அன்பே உனக்கு உவமை
அன்னை என நினைத்திருந்தேன் ஆனால்
அன்னையை விடவும் அரியதன்றோ உன் அன்பு

அன்பே உனக்கு உவமை
கடவுள் என நினைத்திருந்தேன் ஆனால்
கடவுளைவிடவும் பெரியதன்றோ உன் கருணை

அதனால்தான் உன்னை என்
தமிழ் என்று நினைத்துவிட்டேன் அதைவிட
தலை சிறந்தது வேறில்லை அல்லவா.

புரிதல்

என் மௌனத்தை

சரியாக புரிந்து

பேசியவனே


என் வலிகளை

சரியாக புரிந்து

மாற்றியவனே


என் தேவைகள்

சரியாக புரிந்து

நிறைவேற்றியவனே


இன்றோ

என் காதலை மட்டும்

நட்பென்று தவறாகப் புரிந்து

விலகுவது ஏன்

மனமே

சிறு வயதின் நினைவுகளை
சிதறாமல் ஏந்தும் மனமே!

இளம் வயதின் இழப்புகளை
இன்னும் சுமக்கும் மனமே!

தொலைந்து போன கனவுகளை
தொலைக்காமல் காக்கும் மனமே!

இல்லாததை எண்ணி
ஏக்கம் கொள்ளும் மனமே!

நீ மட்டும் இல்லாவிட்டால்
நிம்மதியாய் இருப்பேன்

மனமே நீ தொலைந்துவிடு
மகிழ்ச்சியாய் இருப்பேன்

மறக்க நினைக்கும் பலவற்றையும்
நினைத்து மறுகும் நிலை மாற

நினைவே நீ நீங்கிவிடு
நிம்மதியாய் இருப்பேன்.

வசந்தம்

என் கால்கள் தன்வழி
செல்ல மறுத்துவிட்டன
நீ வழியில் வந்ததால்

என் கண்கள் வேறு எதையும்
காண மறுத்துவிட்டன
நீ எதிரில் தோன்றியதால்

என் வாய் எதிர்
பேச மறுத்துவிட்டது
நீ அழகாய் பேசியதால்

என் இதயம் வேறு
நினைக்க மறுத்துவிட்டது
நீ அதில் இருப்பதால்

என் வாழ்க்கை முழுதும்
வசந்தம் ஆகிவிட்டது
நீ துணையாய் வந்ததால்

பெருமை

பெருமை கொண்டது தென்றல்

உன்னை தீண்டியதால்

பெருமை கொண்டது தெய்வம்

உன்னை படைத்ததால்

பெருமை கொண்டது தமிழ்

நீ பேசியதால்

பெருமை கொண்டது பாதை

நீ நடந்ததால்

பெருமை கொண்டது நாடு

நீ பிறந்ததால்

பெருமை கொண்டாள் உன் தாய்

உனைப் வயிற்றில் சுமந்ததால்

பெருமை கொள்கிறேன் நான்

உனை மனதில் சுமப்பதால்

Tuesday 27 December 2011

அன்னையின் மடியில்


பலகணி வழியே  நிலவு வீசும்
பால் ஒளிக்கற்றையில் நனையும்  சுகம்   
பால் போல்  நிலவு எரியும்
பனிவிழும் இரவில் தனியே நடக்கும் சுகம் 
சில்லென்ற இளமாலையில்
புல்வெளியில் பட்டாம்பூச்சி பிடிக்கும் சுகம் 
அதிகாலை வேளையில் கடற்கரையில்  நின்று
ஆதவன் உதிப்பதை பார்க்கும்  சுகம்  -இவை
அத்தனையையும் மிஞ்சியது அன்னையின் மடியில்
ஆதரவாய் தலை சாய்க்கும் சுகம்