Wednesday 28 December 2011

மழலைக்காலம்

புலரும் காலை பொழுதினிலே

புல்லின் மீது துயில் கொள்ளும்

பனித்துளியை ஸ்பரிசித்து சிலிர்த்த காலம்


பகலவன் தகிக்கத் தொடங்கும் நேரம்

பலவிதமான தோழிகளுடன்

பள்ளி நோக்கி நடந்து பாடம் பயின்ற காலம்


வீடு திரும்பும் வேளையிலே

வெண்ணிற ஆற்றின் மணல் பரப்பில்

வீடு கட்டி விளையாடி மகிழ்ந்த காலம்


சாரல் மழையில் மணல் வீடு

சரிந்திடாமல் குடை மறைத்து - நான்

சொட்ட நனைந்து வீட்டில் திட்டு வாங்கிய காலம்


மஞ்சள் மாலை வெயிலில் கிளிகளின்

கொஞ்சு மழலை ரசித்தபடி நிழல் பரப்பிய

மாமரக் கிளையில் ஊஞ்சல் ஆடிய காலம்


மயக்கும் நிலவின் இரவுகளில் பாட்டியின்

மடியினில் அமர்ந்து பலவிதமாய்

மாயக்கதைகளைக் கேட்டபடி துயின்றகாலம்- இன்னும்


தடைகளின்றி பறவையென பறந்து திரிந்த பொற்காலம்

தவமிருந்தாலும் இனி வருமோ அந்த

தொலைந்து போய்விட்ட மழலைக்காலம்

No comments:

Post a Comment