Wednesday 28 December 2011

கவசம்

பனி ரோஜா மொட்டொன்று

பவள இதழ் விரித்தின்று

கடிதாக மலர்ந்தது

காற்றினிலே அசைந்தது.

அடுத்த வீட்டுத் தோட்டத்தில்

அலர்ந்திருந்த மல்லிக்கு

அதன் அழகில் அசூயை

அதனால் கூறும் அறிவுரை

பேரழகுத் தங்கையே

பிரமித்தேன் உன் அழகில் ஆனால்

இந்தக் கூர் முட்கள்

வந்து குறைத்தன உன்னழகை

என்று கூறியது

ஏளனமாய் நகைத்தது

மல்லியின் பேச்சை நம்பி

முட்களைக் கடிந்தது ரோஜா

கொல்லவே வந்தீர் நீங்கள்

கொடும் கூர் முட்களே

உம்மால் எனக்குச் சிறுமை

ஒழிந்துபோம் என்னை விட்டு

பழியான இந்த வார்த்தைக்கேட்டு

பதைபதைத்து அதனால்

மனமுடைந்த முட்கள்

மண்ணில் உதிர்ந்தன

அடுத்த நிமிடம் ரோஜாவை

ஆடு மேய்ந்து சென்றது

கவசமாக முட்களைக்

கருதாமல் இழந்த ரோஜா

கதறி இனி என்ன பலன்

No comments:

Post a Comment